Month: December 2017

கணபதி மந்திரம்


கணபதி மந்திரம் …

ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே

ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார். இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்”என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார்.

எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து
சுத்தமுடன் ஓம்கிலி அங்உங்கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே.
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.

இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.

– அகத்திய வாத சௌமியம்

சித்த ரகசியம் – “உடல் கட்டு மந்திரங்கள்”

சித்த ரகசியம் – “உடல் கட்டு மந்திரங்கள்”

நமது உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச சக்திகளான கோள்கள், அட்டதிக்கு பாலகர்களுக்கு கட்டுப்பட்டது.பஞ்சபூதங்களின் கலவையான மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின் ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும். இந்த கட்டுப் பாடுகளை உடைத்தால் மட்டுமே எந்தவொரு மனிதரும் சிறப்பாகவும், சுயமாகவும் செயல்பட முடியும் என சித்தர்கள் நம்பினர்.இதற்கான தேடல்களும் தெளிவுகளுமே இந்த பதிவு…

பிரபஞ்ச சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து உடலை வெளியேற்றுவது, வெளியேறிய பின்னர் அந்த உடலை காப்பது என இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதாக “உடல் கட்டு மந்திரங்கள்” கருதப் படுகிறது.இந்த உடல் கட்டு மந்திரங்கள் பற்றி அகத்தியர் தனது அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர் மாந்திரீக காவியம் என்கிற நூலில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பது கோள்களுக்கும் என தனித் தனியே ஒன்பது மந்திரங்களும், அட்ட திக்கு பாலகர்களுக்கென மந்திரமும் கூறப் பட்டிருக்கிறது.

இனி நவ கோள்களின் உடல் கட்டு மந்திரங்களைப் பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு மந்திரமாக செபித்து அதில் சித்தியடைந்த பின்னரே அடுத்த மந்திரத்தை முயற்சிக்க வேண்டும் என அகத்தியர் கூறுகிறார். அதாவது…

"பக்குவமாய் உடற்கட்டு நிவர்த்தி செய்ய
மாந்திரீக பீஜத்தை இதிலே சொன்னேன்
வகையோடே மந்திரத்தை தான் மைந்தா
தனி தனியாய் உருத்தான் போடு போடே"

– அகத்தியர் –

சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு
உத்தமனே அம் ஹீம் என்று லட்சம்
திருவாக செபித்துவர கட்டுத்தீரும்"

– அகத்தியர் –

முதலில் சூரியன் உடல் கட்டு தீர "அம் ஹீம்" என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர
அருவாக ஹீம் உறீம் என்று லட்சம்
அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்"

– அகத்தியர் –

ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர "ஹீம் உறீம்" என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்..

"நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர
ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே"

– அகத்தியர் –

நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர "ஸ்ரீம் றீங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

புதனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு
இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம்
நன்றுஉருச் செபித்திடவே கட்டுத் தீரும்"

– அகத்தியர் –

புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு சந்தோசமாக "வங் யங் நசி மசி" ன்று லட்சம் உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

குருவுக்கான உடல் கட்டு மந்திரம்..

"நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு
அன்றுநீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்றுலட்சம்
அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்"

– அகத்தியர் –

நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றீம் நசி மசி" என்று அன்பாக லட்சம் உரு செபித்தால் குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

அடுத்த நான்கு கோள்களின் உடல் கட்டு மந்திரம் , சனி பகவானின் மகன் என கருதப் படும் குளிகனுக்கான உடல் கட்டு மந்திரம் மற்றும் அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரத்துடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

பின் குறிப்பு :
இந்த பதிவுகளில் உள்ள விவரங்கள் அனைத்தும் ஒரு தகவல் பகிர்வே, மூட நம்பிக்கைகளை பரப்புவதோ அல்லது மத நம்பிக்கைகளை விதைப்பதோ எனது நோக்கமில்லை.இவற்றை மூடநம்பிக்கை, பழங்கதை என புறந்தள்ளாது ஆராயவும், விவாதிக்கவும் முற்பட்டால் ஏதேனும் தெளிவுகள் கிடைக்கலாம்.

சித்த ரகசியம் – உடல்கட்டு மந்திரங்கள்

சித்த ரகசியம் – உடல்கட்டு மந்திரங்கள் தொடர்ச்சி..
சுக்கிரனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு
இறீம் றீம் நசி மசி யென்று போடே"

– அகத்தியர் –

சுக்கிர பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "இறீம் றீம் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் சுக்கிர பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

சனிக்கான உடல் கட்டு மந்திரம்..

"போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு
புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி
தேடுவாய் லட்சமுருப் போடு போடே"

– அகத்தியர் –

சனி பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றூம் றூம்" என்று லட்சம் உரு செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

ராகுவுக்கான உடல் கட்டு மந்திரம்..

"திறமான இராகுவுட கட்டுதீர
நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்றுலட்சம்
நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்"

– அகத்தியர் –

திறமான இராகு பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "அரீம் ஸ்ரீம் நசி மசி" என்று லட்சம் உரு நலமாகச் செபித்தால் இராகு பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

கேதுவுக்கான உடல் கட்டு மந்திரம்..

"சாடுவாய் கேதுவுட கட்டு தீர
சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம் போடே"

– அகத்தியர் –

கேது பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "அங் சிங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் கேது பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகதியர்.

நவ கோள்களின் மந்திரங்களுடன், சனியின் மகன் என கருதப் படும் குளிகனுக்கும் உடல் கட்டு மந்திரங்களை அகத்தியர் அருளியிருக்கிறார்.

குளிகன் உடல் கட்டு மந்திரம்..

"நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க
நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம்
தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா"

– அகத்தியர் –

குளிகனின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஓம் ஐயும் ஐயும்" என்று லட்சம் உரு செபித்தால் குளிகனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரம்.

"பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப்
பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு
சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும்
சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் என்றும்
கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும்
குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும்
காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும்
கணக்குலட்ச முருச் செபித்துப் போடே"

– அகத்தியர் –

"வீட்சணிவா வா வீரா பார் பார் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங் றீங் வங் வங் பங் றீ றீ றீ றீ கிறாங் மங் ராங் ராங் வறீம் பம் வம்" என்று எண்ணிக்கை குறையாது லட்சம் உரு செபித்தால் சித்தியாகும். இதுவே அட்டதிக்கு பாலகர் கட்டு மந்திரமாகும் என்கிறார்.

இந்த உடல் கட்டு மந்திரங்கள் சித்தியானால் உனது உடலை கிரகசாரங்களோ, அட்டதிக்குப் பாலகர்களோ, பஞ்ச பூதங்களோ கட்டுப்படுத்த இயலாது என்று சொல்லும் அகத்தியர், மந்திரம் சித்தியான பின்னர் உனது உடல் முழுமையாக உனது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார்.

இந்த மந்திரங்களை செபிக்கும் முறைகளைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.

WhatsApp WhatsApp us