சித்த ரகசியம் – “உடல் கட்டு மந்திரங்கள்”

சித்த ரகசியம் – “உடல் கட்டு மந்திரங்கள்”

நமது உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச சக்திகளான கோள்கள், அட்டதிக்கு பாலகர்களுக்கு கட்டுப்பட்டது.பஞ்சபூதங்களின் கலவையான மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின் ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும். இந்த கட்டுப் பாடுகளை உடைத்தால் மட்டுமே எந்தவொரு மனிதரும் சிறப்பாகவும், சுயமாகவும் செயல்பட முடியும் என சித்தர்கள் நம்பினர்.இதற்கான தேடல்களும் தெளிவுகளுமே இந்த பதிவு…

பிரபஞ்ச சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து உடலை வெளியேற்றுவது, வெளியேறிய பின்னர் அந்த உடலை காப்பது என இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதாக “உடல் கட்டு மந்திரங்கள்” கருதப் படுகிறது.இந்த உடல் கட்டு மந்திரங்கள் பற்றி அகத்தியர் தனது அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர் மாந்திரீக காவியம் என்கிற நூலில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பது கோள்களுக்கும் என தனித் தனியே ஒன்பது மந்திரங்களும், அட்ட திக்கு பாலகர்களுக்கென மந்திரமும் கூறப் பட்டிருக்கிறது.

இனி நவ கோள்களின் உடல் கட்டு மந்திரங்களைப் பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு மந்திரமாக செபித்து அதில் சித்தியடைந்த பின்னரே அடுத்த மந்திரத்தை முயற்சிக்க வேண்டும் என அகத்தியர் கூறுகிறார். அதாவது…

"பக்குவமாய் உடற்கட்டு நிவர்த்தி செய்ய
மாந்திரீக பீஜத்தை இதிலே சொன்னேன்
வகையோடே மந்திரத்தை தான் மைந்தா
தனி தனியாய் உருத்தான் போடு போடே"

– அகத்தியர் –

சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு
உத்தமனே அம் ஹீம் என்று லட்சம்
திருவாக செபித்துவர கட்டுத்தீரும்"

– அகத்தியர் –

முதலில் சூரியன் உடல் கட்டு தீர "அம் ஹீம்" என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர
அருவாக ஹீம் உறீம் என்று லட்சம்
அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்"

– அகத்தியர் –

ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர "ஹீம் உறீம்" என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்..

"நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர
ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே"

– அகத்தியர் –

நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர "ஸ்ரீம் றீங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

புதனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு
இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம்
நன்றுஉருச் செபித்திடவே கட்டுத் தீரும்"

– அகத்தியர் –

புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு சந்தோசமாக "வங் யங் நசி மசி" ன்று லட்சம் உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

குருவுக்கான உடல் கட்டு மந்திரம்..

"நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு
அன்றுநீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்றுலட்சம்
அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்"

– அகத்தியர் –

நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றீம் நசி மசி" என்று அன்பாக லட்சம் உரு செபித்தால் குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

அடுத்த நான்கு கோள்களின் உடல் கட்டு மந்திரம் , சனி பகவானின் மகன் என கருதப் படும் குளிகனுக்கான உடல் கட்டு மந்திரம் மற்றும் அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரத்துடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

பின் குறிப்பு :
இந்த பதிவுகளில் உள்ள விவரங்கள் அனைத்தும் ஒரு தகவல் பகிர்வே, மூட நம்பிக்கைகளை பரப்புவதோ அல்லது மத நம்பிக்கைகளை விதைப்பதோ எனது நோக்கமில்லை.இவற்றை மூடநம்பிக்கை, பழங்கதை என புறந்தள்ளாது ஆராயவும், விவாதிக்கவும் முற்பட்டால் ஏதேனும் தெளிவுகள் கிடைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp WhatsApp us